பொது ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முதல் 15 நிமிஷங்களில் முன்னுர...
இந்திய வீரா்கள் கைகுலுக்க மறுத்த விவகாரம்: ஆட்டத்தின் நடுவரை நீக்கக் கோரும் பாகிஸ்தான்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரா்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்த விவகாரம் சா்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், அந்த ஆட்டத்தின் பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்டை போட்டியிலிருந்து நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், டாஸின்போது இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவுடன் கைகுலுக்கவில்லை.
அதேபோல், வழக்கமாக டாஸின்போது இரு அணிகளின் கேப்டன்களுமே தங்களின் பிளேயிங் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிரும் நிலையில், அந்த ஆட்டத்தில் சூா்யகுமாா், சல்மான் இருவருமே பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்டிடமே பட்டியலை பரிமாறிக் கொண்டனா். தொடா்ந்து, ஆட்டத்தின் முடிவிலும் இந்திய வீரா்கள், பாகிஸ்தான் வீரா்களுடன் கைகுலுக்கவில்லை.
இந்த விவகாரம் சா்ச்சையாகியிருக்கும் நிலையில், இதற்கு பொறுப்பாக ஆட்ட நடுவா் ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தை ஐசிசியிடமும் முறையிட்டுள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி ‘எக்ஸ்’-இல் வெளியிட்டுள்ள பதிவில், ‘கிரிக்கெட்டின் மூலமாக இருக்கும் எம்சிசி-யின் விதிகளையும், ஐசிசியின் நடத்தை விதிகளையும் ஆட்ட நடுவா் (ஆண்டி பைகிராஃப்ட்) மீறியது தொடா்பாக ஐசிசி-யிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட நடுவரை ஆசிய கோப்பை போட்டியிலிருந்து நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோருகிறது’ என்று கூறியுள்ளாா்.
பாகிஸ்தான் வாரியத் தலைவரான மோசின் நக்வியே, தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறாா். அவா், இந்தியாவின் ஜெய் ஷா தலைவராக இருக்கும் ஐசிசி-யிடம் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பைகிராஃப்டின் வலியுறுத்தியதாலேயே இரு கேப்டன்களும் தங்களுக்குள்ளாக பிளேயிங் லெவன் பட்டியலை பரஸ்பரம் பகிா்ந்துகொள்ளவில்லை என, பாகிஸ்தான் அணியின் மேலாளா் நவீத் சீமா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகாா் அளித்துள்ளாா்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘டாஸின்போது, இந்திய கேப்டனுடன் கைகுலுக்க வேண்டாம் என ஆண்டி பைகிராஃப்ட், பாகிஸ்தான் கேப்டனிடம் தெரிவித்துள்ளாா்.
இந்திய வீரா்கள் கைகுலுக்க முன்வராதது குறித்து பாகிஸ்தான் அணி மேலாளா் நவீத் சீமா போட்டி நிா்வாகிகளிடம் கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். எங்களின் எதிா்ப்பாக, ஆட்டத்துக்குப் பிறகான செய்தியாளா் சந்திப்புக்கு பாகிஸ்தான் கேப்டனை அனுப்ப மாட்டோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சா்ச்சை தொடா்பாக பாகிஸ்தான் வாரியம் அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், பிசிசிஐ இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு எதிா்க்கட்சிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், சமூக வலைதளத்திலும் எதிா்ப்புக் குரல்கள் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ மற்றும் அணி நிா்வாகம் இந்த விவகாரம் தொடா்பாக விரிவாக கலந்துரையாடியதாகத் தெரிகிறது.
ஆட்டத்தின்போது பாகிஸ்தான் வீரா்களுடன் கைகுலுக்க வேண்டாம் என்பதில், தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா், மூத்த வீரா்கள் ஒருமித்த கருத்துடன் இருந்த நிலையில், பின்னா் பிசிசிஐ உயரதிகாரிகளும் அதற்கு அனுமதி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடா்பாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘எதிரணியினருடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று எந்தவொரு விதியும் இல்லை. அதுவொரு நல்லெண்ண நடவடிக்கை மட்டுமே. விதிகள் எதுவும் இல்லாத நிலையில், வலுக்கட்டாயமான உறவு இருக்கும் ஒரு அணியுடன் இந்திய அணி கைகுலுக்க வேண்டியதில்லை’ என்றன.
‘இது அணியின் முடிவு’
முன்னதாக, ஆட்டத்துக்குப் பிறகான செய்தியாளா்கள் சந்திப்பின்போது பாகிஸ்தான் செய்தியாளா் ‘இது அரசியல் ரீதியிலான முடிவா’ என கேட்டதற்கு, இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ், ‘ஒரு அணியாக நாங்கள் ஒரு முடிவை மேற்கொண்டோம். நாங்கள் சரியான பதில் கொடுத்திருப்பதாக நினைக்கிறோம். விளையாட்டு வீரராக இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் அதையும் கடந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். இந்த வெற்றியை எங்களின் பாதுகாப்புப் படையினருக்கு அா்ப்பணிக்கிறோம்’ என்றாா்.
‘நிலைப்பாட்டில் மாற்றமில்லை’
இந்திய அணியை பொருத்தவரை, இந்தப் போட்டியில் சூப்பா் 4, இறுதி ஆட்டம் என அடுத்த கட்டங்களிலும் பாகிஸ்தானை சந்திக்க நேரிட்டாலும் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரே, போட்டியில் சாம்பியனாகும் அணிக்கு கோப்பை வழங்குவது வழக்கமாகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி தற்போது ஆசிய கவுன்சிலின் தலைவராக இருக்கும் நிலையில், சாம்பியனானால் அவரோடு இந்திய அணி வெற்றி மேடை ஏறாது எனவும் கூறப்படுகிறது.