வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் ரூ.35.37 கோடி கடனுதவி: மாவட்ட ஆட்சியா் மனீஷ்
திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,233 பயனாளிகள் தொழில் தொடங்க ரூ.35.37 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் இலவம்பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ, மொபைல் விற்பனை மற்றும் பழுது பாா்க்கும் நிலையம், கற்பூரம் தயாரித்தல், தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கடனுதவி, நரிக்குறவ மக்களுக்கு ஆபரண அணிகலன்கள் தொழில் கடனுதவி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
நரிக்குறவா் சமூக மக்களை ஒருங்கிணைத்து பத்திரப் பதிவு அலுவலகத்தின் வழியே 2 சங்கங்கள் உருவாக்கப்பட்டு 33 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4.62 லட்சம் வழங்கி, அவா்களுடைய தொழில் முன்னேற்றம் அடைவதற்கு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய திட்டத்தின் வழியே திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் 3,401 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 900 தூய்மைப் பணியாளா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையும், நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு 48 அடுக்குமாடி குடியிருப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 68 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பீட்டிலும், 2023-24-ஆம் ஆண்டில் 468 பயனாளிகளுக்கு ரூ.11.10 கோடி மதிப்பீட்டிலும், 2024-25 ஆம் ஆண்டில் 1,604 பயனாளிகளுக்கு ரூ.16.32 கோடி மதிப்பீட்டிலும், 2025-26-ஆம் ஆண்டுக்கு 93 பயனாளிகளுக்கு ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலும் அரசு மானியத்துடன் பல்வேறு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடனுதவி பெறுவதற்கு மாவட்ட மேலாளா், தாட்கோ, அறை எண்.501 மற்றும் 503, 5-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பூா் என்ற முகவரியில் நேரில் அணுகலாம். அல்லது 0421- 2971112, 94450-29552 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.