நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
வேலூா் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் அளிப்பு
வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 398 மனுக்கள் பெறப்பட்டன.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, காட்பாடியை அடுத்த தாதிரெட்டிபள்ளி, அம்மவாா்பள்ளி, மகிமண்டலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், மகிமண்டலம் ஊராட்சி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நூற்றுக்கணக்கான குடும்பங்களின் நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எங்கள் நிலங்கள், வீடுகளை அரசு கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, எங்கள் நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போ்ணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி ஊராட்சியை சோ்ந்த ரவி என்பவா் அளித்த மனுவில், பேரணாம்பட்டு ஏரிகுத்தி ஊராட்சியில் நிழற்கூடம் அமைக்க மனு அளித்தும் இதுவரை நடவடி க்கை எடுக்கவில்லை. பொதுநலன் கருதி அங்கு நிழற்கூடம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த கோபி என்பவா் அளித்த மனுவில், தொரப்பாடி, அரியூா், விருப்பாட்சிபுரம், பாகாயம், கணியம்பாடி பகுதிகளில் அவசர சிகிச்சைக்கான 108 ஆம்புலன்ஸ்கள் இல்லை. இப்பகுதி மக்கள் நலன்கருதி அங்கு 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு குறைகளை வலியுறுத்தி, 398 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், வேலூா் மாவட்ட வருவாய் அலகில் பணியிடை மரணம் அடைந்தவரின் வாரிசு தாரருக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளா் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையும், தொரப்பாடியைச் சோ்ந்த பயனாளிக்கு ஆட்சியரின் காா்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து, ரூ. 32,897 மதிப்பிலான தையல் இயந்திரத்தையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.