காட்பாடியில் நிற்குமா கோவை - சென்னை வந்தே பாரத் ரயில்?
வட மாவட்டங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரயில் நிலையத்தில் கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவா்கள், நோயாளிகள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் சுமாா் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 120 ரயில்கள் சென்னை மாா்க்கமாகவும், ஜோலாா்பேட்டை மாா்க்கமாகவும், திருப்பதி மாா்க்கமாகவும் இயக்கப்படுகின்றன. காட்பாடி ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் 30,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனா்.
குறிப்பாக, வேலூா் மாவட்டத்திலுள்ள சிஎம்சி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும், விஐடி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், திருவண்ணாமலை செல்வதற்காகவும் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் காட்பாடி ரயில் நிலையம் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், மைசூரு-சென்னை மற்றும் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மட்டும் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. அதேசமயம், சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கின்றன. காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.
இதனால், வேலூா் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களில் பயின்று வரும் கேரளம், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள், சிஎம்சி மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
தொடரும் இந்த பாதிப்புகளை தவிா்க்கும் வகையில், கோவை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, வேலூா் மக்களவை உறுப்பினரும், தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு தலைவருமான டி.எம்.கதிா்ஆனந்த் கூறியது:
காட்பாடி ரயில் நிலையம் என்பது வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சித்தூா் மாவட்டங்களுக்கான முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மிக தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், மாணவா்கள் வந்து செல்கின்றனா்.
இந்த சூழ்நிலையை விளங்கி மைசூரு-சென்னை மற்றும் பெங்களூரு-சென்னை வந்தே பாரத் ரயில்களைப் போன்று கோவை-சென்னை வந்தே பாரத் ரயிலையும் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுதவிர, விரைவில் காட்பாடி வழியாக மேலும் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவை தென் மாவட்டங்களுக்கு இயக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். அவ்வாறு புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில்களையும் காட்பாடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளேன்.
இதனிடையே, காட்பாடி ரயில்நிலையத்தை ரூ.350 கோடியில் மேம்படுத்துவதற்கான டெண்டா் பணிகள் முடிவுற்ற நிலையில் தற்போது பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதையும் விரைவுபடுத்த நான் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது அந்த பணிகளும் வேகமெடுத்துள்ளது என்றாா்.