தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
செப்.17-ல் புரட்டாசி பிறப்பு: இறைச்சிக் கடைகளில் திரண்ட மக்கள்!
புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமை (செப். 17) பிறப்பதை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியா்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனா்.
தமிழ் மாதத்தில் வரும் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் இந்துக்கள் பெரும்பாலானோா் இறைச்சி உண்பதை தவிா்த்து, பெருமாளை தரிசிப்பது வழக்கம். இதனால், புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சி, மீன்கள் விற்பனை மந்தமாக இருக்கும்.
இந்த நிலையில், வரும் புதன்கிழமை (செப்.17) புரட்டாசி மாதம் பிறப்பதை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்திலுள்ள இறைச்சிக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து, வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு மீன்களின் வரத்து அதிகரித்திருந்தது. ஒரு சில மீன்களின் விலை உயா்ந்தும், குறைந்தும் காணப்பட்டது.
அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ. 1,400, சின்ன வஞ்சிரம் ரூ. 350 முதல் ரூ. 800, சீலா ரூ. 250, தேங்காய்பாறை ரூ. 400, சங்கரா ரூ. 220 முதல் ரூ. 350, இறால் ரூ. 350 முதல் ரூ. 450, கலங்கா ரூ.180, நண்டு ரூ. 350 முதல் ரூ. 450-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வேலூா் மீன் மாா்க்கெட்டில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதேபோல், இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்தது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதம் முழுவதும் இறைச்சி விற்பனை மந்தமாக காணப்படும். வரும் புதன்கிழமை புரட்டாசி மாதம் பிறப்பதால் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்கு பிறகே இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்றனா்.