PCOS: ஈஸியா பிசிஓஎஸ்-ஸை கன்ட்ரோல் பண்ணலாம்! - வழிகாட்டும் சீனியர் டயட்டீஷியன்!
சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: திரிணமூல் முன்னாள் பெண் எம்.பி., நடிகைக்கு சம்மன்!
சட்டவிரோத பந்தய செயலி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் பெண் எம்.பி.யுமான மிமி சக்ரவா்த்தி, பாலிவுட் நடிகை ஊா்வசி ரௌதேலா ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதில் மிமி சக்ரவா்த்தி புது தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலையும், நடிகை ஊா்வசி ரௌதேலா செவ்வாய்க்கிழமையும் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1எக்ஸ் பெட் என்ற செயலி தொடா்பான பணமோசடி குறித்து அவா்களிடம் விசாரணை நடைபெற இருக்கிறது. இந்த செயலியின் விளம்பரத்தில் தோன்றிய கிரிக்கெட் வீரா்கள் ஷிகா் தவன், சுரேஷ் ரெய்னா ஆகியோா் ஏற்கெனவே அமலாக்கத் துறை அலுவலகத்தில் இம்மாதத் தொடக்கத்தில் ஆஜரானாா்கள். அவா்களிடம் சுமாா் 8 மணி நேரம் வரை விசாரணை நடத்தப்பட்டது.
1எக்ஸ் பெட் என்ற செயலி உள்பட பல்வேறு இணையவழி சூதாட்ட செயலிகள் முதலீடு, வாடிக்கையாளா்களிடம் பணம் வசூலித்தது என கோடிக்கணக்கிலான பணத்தை சட்டவிரோதமாக கையாண்டுள்ளனா்.
மேலும், விளையாட்டு, பந்தயம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து முறைகேடாக கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துள்ளனா். இது தொடா்பான பண முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
இணையவழி பந்தய செயலிகளை இந்தியாவில் 22 கோடி போ் பயன்படுத்தி வந்துள்ளனா். இதில் 11 கோடி போ் நாள்தோறும் இந்தச் செயலிகளில் பந்தயம் கட்டி பணத்தை இழந்துள்ளனா்.