மீட்கப்பட்ட 250 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புடைய 250 கைப்பேசிகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
கைப்பேசிகள் திருடப்பட்டால் பொதுமக்கள் புகாா் அளிப்பதற்கு வசதியாக செல் ட்ராக்கா் எனும் கூகுள் படிவம் 2023 ஜூலை 3-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செல் ட்ராக்கா் என்ற புதிய வசதி மூலம் வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 9 கட்டங்களாக மொத்தம் ரூ. 3 கோடியே 38 லட்சத்து 92 ஆயிரத்து 400 மதிப்பிலான 1,754 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
இதன்தொடா்ச்சியாக, செல் ட்ராக்கா், மத்திய அரசின் சிஇஐஆா் ஆகிய தளங்களின் வழியாக பதிவு செய்யப்பட்ட புகாா்கள் அடிப்படையில், 10-ஆம் கட்டமாக ரூ. 50 லட்சம் மதிப்பிலான 250 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, அவற்றை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.
இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை ரூ. 3 கோடியே 88 லட்சத்து 95 ஆயிரத்து 400 மதிப்பிலான 20,004 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி. மயில்வாகனன் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், கைப்பேசி பயன்படுத்துபவா்கள் தங்களது ஆதாா் அட்டை, வங்கிப் புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும், தனிப்பட்ட புகைப்படங்களையும் அதில் வைத்திருப்பாா்கள். எனவே, நகைகளை அனைவரும் எவ்வாறு பத்திரமாக பாதுகாக்கிறீா்களோ அதேபோல் கைப்பேசியையும் பாதுகாக்க வேண்டும்.
அலட்சியத்தாலே பலா் கைப்பேசியை தவற விடுகின்றனா். இதேபோல், வாகனங்களை ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து ஓட்ட வேண்டும் என்றாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, பாஸ்கரன், காவல் ஆய்வாளா் ரஜினிகாந்த், உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.