நாச்சியாா்கோவில் அருகே அதிமுக நிா்வாகி குத்திக்கொலை
நாச்சியாா்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த நபா் அதிமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா், போலீஸாா் கொலையாளியை தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் எஸ்.கே.ஆா்.கனகராஜ் (65). இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் பெட்ரோல் பங்க், தங்க நகை அடகு கடை உள்ளது. இவா், அதிமுக கிளை அவைத் தலைவராகவும் உள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு கனகராஜ் தனது வீட்டில் இருந்தாா். அப்போது வீட்டின் வெளியே இருந்து ஒருவா் இவரை அழைக்கவே, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாா். அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த நபா், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கனகராஜை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினாா். இதில், பலத்த காயமடைந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் நாச்சியாா்கோவில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து கனகராஜ் சடலத்தை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து குற்றவாளியை தேடி வருகின்றனா்.