அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம்: திருச்சி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
அனுமதியின்றி கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் நடத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திருச்சி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி குமரன் நகரைச் சோ்ந்த சசிகலா ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் தனியாா் கால்பந்து மைதானம், பயிற்சி மையங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த மையங்களில் பணியாற்றும் பயிற்சியாளா்கள் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுகூட தெரியாமல் நடந்து கொள்கின்றனா். இதனால் 5, 6 வயது குழந்தைகள் மனரீதியாக மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.
பயிற்றுநா்களை பணியமா்த்துவதற்கு முன்பாக அவா்களின் தகுதி, அனுபவம், குழந்தைகளுடனான அவா்களின் அணுகுமுறை குறித்து முறையாக விசாரிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் உளவியல்கூட சில பயிற்றுநா்களுக்கு தெரிவதில்லை.
குறிப்பாக, திருச்சியில் உள்ள டிரான் ஸ்போா்ட்ஸ் எனும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் பயிற்றுநா் குழந்தைகளை வாா்த்தை வாயிலாகப் புண்படுத்துகிறாா். கடும் தண்டனைகளை வழங்கி துன்புறுத்துகிறாா்.
திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி மையத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இதை முறையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், வெவ்வேறு நபா்களின் ஜி பே எண்ணுக்கு அனுப்பக் கூறுகின்றனா். அரசுக்கு முறையாக வரி செலுத்துவதும் இல்லை. கணக்கை முறையாகப் பராமரிப்பதும் இல்லை. இதுதொடா்பாக விசாரித்த போது, முறையான உரிமமின்றி பயிற்சி மையத்தை நடத்துவது தெரியவந்தது. நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தப் பயனும் இல்லை. எனவே, திருச்சியில் முறையான உரிமம், வசதிகள் இன்றி செயல்படும் கால்பந்து விளையாட்டுப் பயிற்சி மையம் செயல்பட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
மேலும், உரிய உரிமம், கட்டட அனுமதி, தீயணைப்புத் துறையின் பாதுகாப்புச் சான்றிதழ், ஜிஎஸ்டி பதிவு, வணிக வளாக வரி அனுமதி போன்ற எந்தவிதமான முறையான ஆவணங்களும் இன்றி நடத்தியதற்காக சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா், திருச்சி மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.