ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
சட்டவிரோத மணல் திருட்டு : சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம், கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்கக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை இணை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், பொத்தனேந்தலைச் சோ்ந்த ராமேஸ்வரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
திருப்புவனம் அருகே கணக்கன்குடி வடக்கு கண்மாய் 142 ஏக்கா் பரப்பளவு கொண்டது.
பொதுப் பணித் துறை பராமரிப்பில் உள்ள இந்தக் கண்மாய் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி நிலத்தடி நீா் ஆதாரமாகவும் திகழ்கிறது. இந்தக் கண்மாயிலிருந்து செங்கல் தயாரிப்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளப்படுகிறது. இதன் மூலம், பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மணல் அள்ளப்படுவதால் விவசாயத்துக்கு தண்ணீரின்றி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.
எனவே, சட்ட விரோதமாக கண்மாயில் மணல் அள்ளுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி. அருள் முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா், பொதுப் பணித் துறை அதிகாரிகள், கனிம வளத் துறை இணை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.