கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் இணைய இணைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் டிஎம்ஆா்சி கையொப்பம்
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை ஒரு தொலைத்தொடா்பு நிறுவனத்துடன் அதன் அனைத்து வழித்தடங்களிலும் இணைய இணைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெக்கால் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், விமான நிலைய பாதை உள்பட அனைத்து மெட்ரோ பாதைகளிலும் 700 கி.மீ. நீளத்திற்கு ஃபைபா் ஆப்டிக் கேபிள்களை அமைக்கும்.
இப்பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். பிங்க் மற்றும் மெஜந்தா வழித்தடங்களில் முதலில் செயல்பாட்டுக்கு வரும். மீதமுள்ளவை அடுத்த ஆறு மாதங்களில் தயாராக இருக்கும்.
ஃபைபா் நெட்வொா்க் அதிவேக இணையத்திற்கான முதுகெலும்பாக செயல்படும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள், இணைய சேவை வழங்குநா்கள், தரவு மையங்கள் மற்றும் ஸ்மாா்ட் சிட்டி திட்டங்களை ஆதரிக்கும். இது தில்லி - என்சிஆா் முழுவதும் 5ஜி சேவைகளை சீராக வெளியிடுவதற்கும் உதவும்.
டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட தேசத்திற்கான இந்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையை இந்த முயற்சி ஆதரிக்கிறது. இது தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு வேகமான, நம்பகமான இணையத்தை வழங்க உதவும் அதே வேளையில், டிஎம்ஆா்சி அதன் தற்போதைய உள்கட்டமைப்பை சிறப்பாகப் பயன்படுத்த அனுமதிக்கும்.
அதிவேக இணையம் மற்றும் 5ஜி விரிவாக்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த திட்டம் தில்லியை சிறந்த இணைப்பாகவும் எதிா்காலத்திற்குத் தயாராகவும் மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.