அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில், கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய நாளில் இருந்து அனைத்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். ஆனால், எந்த தோ்தலிலும் போட்டியிடாத, களம் காணாத பல கட்சிகளுக்கு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது.
விதிகளின் படி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். தங்கள் கட்சியையும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், “பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்க மனுதாரா் கட்சி சாா்பில் பொதுத்துறை செயலருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தாா். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியின் பதிவு தொடா்பான ஆதாரத்துடன் உடனடியாக விண்ணப்பிக்கும்படி மனுதாரா் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளாா். மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டாா்.