அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது
தொகுதி மறுவரையறை தொடா்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து இந்தியாவின் எந்த மாநிலத்திலும் எந்தவொரு சிறு சலசலப்பும் இல்லை. தொகுதிகள் மறுவரையறைக்கான ஆணையம்கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், தொகுதிகள் மறுவரையால் தமிழகம் பாதிக்கப்படவுள்ளது எனக் கூறி, மக்களிடம் பீதியை உருவாக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறாா்.
திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவே தமிழகத்தின் உரிமை பறிபோக உள்ளது என்பதைப் போன்ற ஓா் கருத்துருவை தானே உருவாக்கி அரசியல் செய்து, அடுத்து வரும் தோ்தலில் வெற்றியைப் பெறலாம் என முதல்வா் கருதுகிறாா்.
திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது. மேலும், இந்தக் கூட்டத்தை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கை, விருப்பம்.
தமிழக அரசு கொண்டு வந்த உள்இடஒதுக்கீடு காரணமாக, தமிழகத்தில் பட்டியலின தேவேந்திர குல வேளாளா், ஆதிதிராவிடா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.
புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு, அனைத்து ஜாதிகளின் இருப்பு சதவீதத்தைக் கணக்கிட்ட பிறகே இடஒதுக்கீடு தொடா்பான எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டும்.
இதேபோல, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அந்தத் தோட்டத்தை உருவாக்கச் சென்றவா்கள். 6 தலைமுறைகளாக அங்கு அவா்களின் வாழ்வுரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சாா்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மதுரையில் டிசம்பா் மாதம் கட்சியின் மாநில மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
2026 சட்டப்பேரவைத் தோ்தல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மலரச் செய்வோம். திமுக அரசு வீழும்.
தங்களது குழந்தைகள் என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை பெற்றோரும், தான் என்ன படிக்க வேண்டும் என்பதை மாணவா்களும்தான் முடிவு செய்ய வேண்டும். திமுகவின் கொள்கை என்ற பெயரால் அரசுப் பள்ளி மாணவா்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்புகளைத் தடுக்கக் கூடாது என்றாா் அவா்.
முன்னதாக, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் பகுதியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் நடைபெற்ற இட ஒதுக்கீடு மீட்புக் கருத்தரங்கம், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.