Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உத...
'அன்னிக்கு என் தலை சிதறிப் போயிருக்கும்' - நடிகை இளவரசி பர்சனல்ஸ்!
'கீதம் சங்கீதம். நீ தானே என் காதல் வேதம்' பாட்டுல குழந்தைத்தனமான எக்ஸ்பிரஷன்ஸ்... 'நிலவு தூங்கும் நேரம்' பாட்டுல சாஃப்ட் அண்ட் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ், 'சம்சாரம் அது மின்சாரம்' படத்திலோ செம்ம கர்வமான எக்ஸ்பிரஷன்ஸ்... இப்படி எல்லா உணர்வுகளுக்கும் பொருத்தமான, லட்சணமான முகம், நடிகை இளவரசிக்கு. புடவைக்கும் பொருந்தும், மாடர்ன் டிரெஸ்ஸுக்கும் பொருந்தும், கிளாமருக்கும் பொருந்தும்... அப்படியொரு முகம் இளவரசிக்கு.
சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களைத் தெரியப்படுத்துற இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ்ல, இந்த வாரம், நடிகை இளவரசி.
பிறந்தது சென்னையிலதான். சொந்தப்பேரு மஞ்சுளா சர்மா. டான்ஸ்ல ரொம்ப விருப்பமா இருந்ததால, அம்மா புவனேஸ்வரி பரத நாட்டியம் கிளாஸ்ல சேர்த்து விட்டிருக்காங்க. அப்பா ஜம்பு ஷர்மா சினிமாத்துறையில இருந்ததால, 1982-ல வெளிவந்த 'வாழ்வே மாயம்' படத்துல சொந்தப்பேர்லயே குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகியிருக்காங்க. அப்போ, மஞ்சுவுக்கு 14 வயசுதான். அடுத்த வருஷமே, 'கொக்கரக்கோ' படத்துல 'இளவரசி'ங்கிற பேர் மாற்றத்தோட தமிழ் சினிமாவுல ஹீரோயினா என்ட்ரி கொடுத்திருக்காங்க. அதுல, பழைய நினைவுகளை மறந்த ஒரு கேரக்டர்ல குழந்தை முகமும் அப்பாவித்தனமான நடிப்பும்னு தமிழ் சினிமாவோட கவனத்தை தன் பக்கமா திருப்பிட்டாங்க.
இந்தப்படம்பத்தி பத்திரிகை நிருபர்கள் இளவரசியோட பேட்டியெடுக்க போனா, அவரோட அப்பாதான் 'அவளுக்கு 15 வயசுதான் ஆகுது. இன்னும் மீடியா கிட்ட எப்படிப் பேசணும்னு அவளுக்குத் தெரியலை'ன்னு சொல்லிட்டு மகளோட சார்பா அத்தனை பதில்களையும் சொல்லுவாராம். ஸோ, அந்தளவுக்கு அப்போ நிஜத்துலயும் இன்னசென்ட்டா தான் இருந்திருக்கார் இளவரசி.

வலுவான குணச்சித்திர கேரக்டர்கள்லேயும் இளவரசி நடிச்சிருக்காங்க!
'கொக்கரக்கோ'வுக்கு அப்புறம் சில படங்கள் நடிச்சிருந்தாலும், 'ஆலய தீபம்', 'மனைவி சொல்லே மந்திரம்', 'மண்ணுக்கேத்த பொண்ணு' ஆகிய படங்கள்ல ஒண்ணுத்துக்கு ஒண்ணு நல்லா வித்தியாசம் காட்டி நடிச்சிருப்பாங்க. ஆலய தீபத்துல, அம்மா யாருன்னே தெரியாத மகள் கேரக்டர். பிறகு, தான் ரொம்ப நேசிக்கிற ஒரு நடிகை தான் தன்னோட அம்மாங்கிறது தெரிஞ்சும் அவரோட சேர்ந்து வாழ முடியாத நிலைன்னு முற்பாதி மகிழ்ச்சி, பிற்பாதி சோகம்னு தன்னோட கேரக்டரை உணர்ந்து நடிச்சிருப்பார்.
மனைவி சொல்லே மந்திரத்துல, பாண்டியனுக்கு ஜோடியா மெட்ராஸ் பாஷை பேசி துவம்சம் செஞ்சிருப்பார். மண்ணுக்கேத்த பொண்ணுல, சென்னையில படிச்சிட்டு சொந்த ஊருக்கு வர்ற நாயகி தன் வீட்ல வேலைபார்க்கிற பாண்டியனை காதலிச்சு அவரோட சேர்றதுக்காக படாதபாடு படுற சோகமான கேரக்டர்.
ஹீரோயின் தவிர்த்து, 'தாய்க்கு ஒரு தாலாட்டு' படத்துல அப்பா சிவாஜிக்கு பயந்து, தன்னோட காதலை கைவிடுற பாவப்பட்ட கேரக்டர். 'ஊமை விழிகள்'ல தான் காதலிக்கிற நிருபருக்கு வில்லன் தொடர்பான தகவல்களை திரட்டித்தர்றதுக்காக தன் உயிரையே விடுற கேரக்டர், 24 மணி நேரம் படத்துல வில்லனால் வன்கொடுமை செய்யப்பட்டு இறக்கிற காலேஜ் ஸ்டூடண்ட், நான் பாடும் பாடல் படத்துல யதார்த்தமான இளம்பெண், தாவணிக்கனவுகளில் பாக்கியராஜின் முறைப்பெண் போன்ற சில வலுவான குணச்சித்திர கேரக்டர்கள்லேயும் இளவரசி நடிச்சிருக்காங்க.
இளவரசின்னாலே, 'குங்குமச்சிமிழ்' படத்துல வர்ற நிலவு தூங்கும் நேரம் பாடலும், மவுத் ஆர்கான் வாசிக்கிற இளவரசியும்தான் முதல்ல ஞாபகத்துக்கு வருவாங்க. வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், வேலை தேட வேண்டிய நிர்பந்தம், இதற்கிடையில மோகனை சந்திக்கிறது, லவ் பண்றது, ரெண்டு பேரும் தங்குறதுக்கு வீடில்லாம பீச்ல, ரயில் பெட்டியில தங்குற மாதிரி இந்தப்படத்தோட கதை போகும். ரொம்ப கனமான கேரக்டர் இந்தப்படத்துல இளவரசிக்கு. அதை ரொம்ப கேஷுவலா செஞ்சிருப்பாங்க.
இதே மாதிரி இன்னொரு கனமான கேரக்டரை 'அவள் சுமங்கலி தான்' படத்துலேயும் செஞ்சிருப்பாங்க. படத்துல விசுவுக்கும், கே.ஆர்.விஜயாவுக்கும் மகளா, கார்த்திக்கோட மனைவியா நடிச்சிருப்பாங்க இளவரசி. கணவனுக்கு உடம்பு சரியில்லாம போக, கணவன் மேல வெச்ச காதலால அவனுக்கு முன்னாடியே இறந்துபோற மனைவி கேரக்டர்ல அவ்ளோ உருக்கமா நடிச்சிருப்பாங்க. அடுத்து, 'சம்சாரம் அது மின்சாரம்' படத்துல வர்ற சரோஜினி கேரக்டர். இளவரசியோட தமிழ் சினிமா கரியர்ல ரொம்ப முக்கியமான படம் இது. அண்ணி லட்சுமிகிட்ட 'நீங்க பத்தாம் கிளாஸ் நான் பி.ஏ'னு கர்வமா பேசுறது, மாமனாரை 'கிழப்பூனை'னு திட்டுறதுன்னு கொஞ்சம் அசந்தாலும் நெகட்டிவ் ஷேட் வரக்கூடிய அந்த கேரக்டர்ல ரொம்ப பேலன்ஸா நடிச்சிருப்பாங்க இளவரசி.

தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு தென்னிந்திய மொழிப்படங்கள்ல ஒரு ரவுண்டு வந்த இளவரசி, அதுக்கப்புறம் 'அரண்மனைக்கிளி' படத்துல ஹீரோயினோட இளவயது அம்மா, பாஞ்சாலங்குறிச்சியில் ஹீரோ பிரபுவின் இளவயசு அம்மான்னு நடிக்க ஆரம்பிச்சாங்க. தவிர, டி.ஆரின் சபாஷ் பாபு, பிரசாந்த் நடிச்ச ஹலோ போன்ற படங்கள்லேயும் இளவரசியோட நடிப்பைப் பார்க்கலாம். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனோட 'கரிப்பு மணிகள்' புத்தகம் அதே பேர்ல தூர்தர்ஷன்ல வந்துச்சு. அதுல, உப்பளத்துல வேலைபார்க்கிற பெண்களோட வாழ்க்கையை தன்னோட இயல்பான நடிப்புல பிரமாதப்படுத்தியிருப்பார்.
இளவரசி, சின்ன வயசுலயே ஹீரோயினாகிட்டதால, அவர் நடிச்ச படங்களோட டைரக்டர்களும், புரொடியூசர்களும் அவங்க வீட்டுக் குழந்தை மாதிரியே இளவரசியை நடத்தினாங்களாம். அதனாலேயே, ஷூட்டிங் ஸ்பாட்ல, 'இங்கிலீஷ் எழுத்து P, R- ஐ சந்திக்கணும்னா ரொம்ப நேரம் ஆகும். ஏன் தெரியுமா? நடுவுல Q இருக்கேன்னு அறுவை ஜோக்ஸ் சொல்லி எல்லாரையும் சிரிக்க வெச்சுட்டு இருப்பாராம். ஆனா, நடிப்புன்னு வந்துட்டா டெடிகேட்டடா செய்வாங்களாம்.

'இதிகாசா'ங்கிற கன்னடப்படத்துக்காக குதிரையில வேகமா போற ஒரு காட்சியில பேலன்ஸ் தவறி கீழே விழ இருந்த இளவரசியை இன்னொரு குதிரையில வந்த ஒரு நடிகர்தான் காப்பாத்தினாராம். ''அந்த நடிகர் மட்டும் என் தலைமுடியைப் பிடிச்சி, இழுத்துத் தூக்கலைன்னா குதிரை ஓடின வேகத்துக்கு நான் தரையில விழுந்து என் தலை சிதறிப் போயிருக்கும்''னு அவரே ஒரு பேட்டியில சொல்லியிருக்கார்.
இதே மாதிரி இன்னொரு சம்பவம். இளவரசிக்கு ஓரளவுக்குத்தான் நீச்சல் தெரியுமாம். ''ஒரு படத்துக்காக, கோவளம் கடல்ல நான் நீச்சலடிக்கிற மாதிரி சீன் எடுத்திட்டிருந்தாங்க. திடீர்னு ஒரு பெரிய அலை வந்து, கண்ணை மூடி திறக்குறதுக்குள்ள என்னை இழுத்துட்டுப் போயிடிச்சி. எனக்குத் தெரிஞ்ச ஓரளவு நீச்சலை அடிச்சு தப்பிச்சு வந்தேன்''னு இன்னொரு பேட்டியில சொல்லியிருக்கார்.
திருமணத்துக்குப்பிறகு சினிமாவுக்கு பிரேக் விட்ட இளவரசி, கணவர், மகள்னு சென்னையில நிம்மதியா வாழ்ந்துட்டிருக்கார். 'இளவரசி கோபால்'ங்கிற பேர்ல இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் வெச்சுக்கிட்டிருக்கிற இளவரசி, அதுல நடிகை, அம்மா, மனைவி, பரதநாட்டியம் டான்சர், நல்ல சமையல் கலைஞர்ன்னு கேப்ஷன் வெச்சிருக்கார். தமிழ் சினிமா ரசிகர்கள் இன்னிக்கும் மறக்காத, திறமையான நடிகைகள்ல இளவரசியும் ஒருத்தர். அவர் இப்பவும் எப்பவும் மகிழ்ச்சியா இருக்க நம்மோட வாழ்த்துகள்..!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
