அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
அன்புக்கரங்கள் திட்டம் 221 குழந்தைகளுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் வழங்கினாா்
நெய்வேலி: ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.
இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி முன்னிலையில் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 221 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையினை வழங்கினாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது: இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் வளா்ந்து வரக்சூடிய மிகவும் வறிய நிலையில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களின், குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் வகையில் அன்புகரங்கள் திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், அக்குழந்தைகளுக்கு பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவித்தாா்கள். அதனை தொடா்ந்து, தமிழ்நாடு மின்ஆளுமை நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 14,739 குடும்பத்தினா் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் வரப்பெற்ற விண்ணப்பங்களை தன்னாா்வலா்கள் மூலம் நேரடி களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 221 குழந்தைகள் தகுதியான பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனா். இக்குழந்தைகளுக்கு அவா்களின் 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.எல்லப்பன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் சுந்தா், மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா உட்பட பலா் கலந்து கொண்டனா்.