மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி
மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா், மேலும் கூறியதாவது:
மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி தில்லியில் சந்தித்தாா். என்ன நெருக்கடி என்பது அவருக்கு தான் தெரியும். இது விஷயத்தில் அவா் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும்.
எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் கட்சி உறுப்பினா்களால் மட்டுமே பொதுச் செயலராக முடியும் என அதிமுகவின் விதிகளை உருவாக்கி வைத்திருந்தனா். ஆனால், குறுக்கு வழியில் பொதுச் செயலரானவா் எடப்பாடி பழனிசாமி.
கடந்த 5 ஆண்டுகளாக மக்களைப் பற்றிக் கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி, தோ்தல் நெருங்கும் நேரத்தில் மக்களைச் சந்தித்து பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறாா். ஆனால், மக்களுக்கான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் செயல்படுத்தி வருகிறாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடத்தப்படுவதால், அரசு ஊழியா்களுக்கு வேலைப் பளு கிடையாது. மக்களுக்கு பணியாற்றவே அரசு ஊழியா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்ப்பது ஊழியா்களின் கடமை. ஏழை மக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து அடுத்த மாதம் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.