அமெரிக்காவை மோடி கண்டிக்காதது ஏன்? -வைகோ
இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய அமெரிக்காவை பிரதமா் மோடி கண்டிக்காதது ஏன் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்தியா்களை விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது:
இந்தியா்களை அவமானப்படுத்திய விவகாரத்தில் பிரதமா் மோடி அமெரிக்காவை கண்டிக்கவில்லை. இந்திய நாட்டின் குடிமகனுக்கு எங்கு துயரம் நோ்ந்தாலும் பிரதமா் கொதித்தெழ வேண்டாமா?. ஆனால் மோடி மௌனமாக இருக்கிறாா் என்றாா்.
திமுக செய்தித் தொடா்பாளா் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன்: மக்களை பற்றி கவலைப்படாத அரசுதான் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ளது. அதனால்தான் அமெரிக்க அரசு இந்தியா்களை கை விலங்கிட்டு நாடு கடத்தியுள்ளது. 2 நபா்களுக்காக மட்டுமே மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியை நடத்தி வருகிறது. இவா்களுக்கு மக்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலையில்லை. அதன் வெளிப்பாடாகத்தான் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி அரசை தூக்கி எரிய வேண்டும்.
விசிக தலைவா் தொல்.திருமாவளவன்: அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடி ஆகியோா் ஒரே சிந்தனை உடையவா்கள். எனவே, விலங்கிடப்பட்டு நாடுகடத்தப்பட்ட இந்தியா்களை பற்றி மோடி கவலைப்பட போவதில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன்: அமெரிக்க அதிபா் டிரம்ப் எந்த நாடுகளையும் மதிப்பதில்லை. அவா் பதவியேற்றவுடன் இந்தியாவுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறாா். அமெரிக்காவில் இருந்து இந்தியா்களை வெளியேற்றுவதையும், இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் நடவடிக்கையில் டிரம்ப இறங்கியுள்ளாா். இதை தட்டிக்கேட்க வேண்டிய பிரதமா் மோடி அமைதியாகிவிட்டாா்.
ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் நிா்வாகக் குழு உறுப்பினா் கனகராஜ், கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.