அம்பேத்கர் மீதான அவதூறு: அமித்ஷா மீதான வழக்கு மார்ச் 1 அன்று விசாரணை!
அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை மார்ச் 1 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் மீதான விசாரணை மார்ச் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்ய முடியாததால் மார்ச் 1 அன்று ஒத்தி வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பளு தூக்கும் பயிற்சி: 270 கிலோ எடை கம்பி கழுத்தில் விழுந்து வீராங்கனை பலி!
கடந்த டிசம்பர் 17 அன்று மாநிலங்களவையில் அரசியலமைப்பின் 75 வது ஆண்டு விழா குறித்த விவாதத்தில் பதிலளித்த அமித்ஷா, காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவதாக விமர்சித்தார்,
மேலும் அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அவர்கள் பயன்படுத்தியிருந்தால் சொர்க்கத்தில் இடமாவது கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோடிக்கணக்கான மக்களால்கடவுளாகக் கருதப்படும் ஒரு நபரைப் பற்றி அமித்ஷா அவதூறாகப் பேசியதாகவும், அவரது கருத்துகள் தனது உணர்வுகளை மிகவும் புண்படுத்தியதாகவும் மனுதாரர் ராம் கெலாவன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது சாட்சியின் வாக்குமூலம் பிப்ரவரி 7 அன்று பதிவு செய்யப்படவிருந்தது. ஆனால் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்தம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
முதல் சாட்சியின் வாக்குமூலம் ஜனவரி 23 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.