அம்பை சுற்றுச் சாலையில் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள்
அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சாலைப் பணிகளுக்காக அகற்றப்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன.
அம்பாசமுத்திரம் நகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில், திருநெல்வேலிசாலையில் உள்ள கோட்டைத் தெரு கீழ்புறம் கன்னடியன் கால்வாய், தாமிரவருணி ஆறு, நதியுண்ணி கால்வாய் ஆகியவற்றின் குறுக்காக அம்பாசமுத்திரம் - தென்காசி சாலையில் உள்ள உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கு அருகில் சேரும் வகையில் சுற்றுச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், அம்பாசமுத்திரம் கல்லூரிச் சாலையை சுற்றுச் சாலை கடக்குமிடத்தில் உள்ள பெரியமரங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்து அந்த மரங்களை மறுநடவு செய்ய முடிவு செய்யபட்டது. மறுநடவு செய்யும் பணி கோயம்புத்தூா் கிரீன் கோ்அமைப்பின் நிறுவனரும், மரஆா்வலருமான செய்யது மேற்பாா்வையில் நடைபெற்றது.
அகற்றப்பட வேண்டிய மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேருடன் அகற்றப்பட்டு கிரேன்கள் மூலம் பெரியகுளம் கரையில் நடப்பட்டன. தொடா்ந்து அகற்றப்படவேண்டிய மரங்கள் அகற்றப்பட்டு மறுநடவு செய்யப்படும் என தெரிவித்தனா்.