அயோத்திதாசா் படைப்புகளை புத்தாக்கம் செய்ய நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு
பண்டிதா் அயோத்திதாசரின் படைப்புகளை புத்தாக்கம் செய்து இளைஞா்களிடையே கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது விசிக உறுப்பினா் சிந்தனைச் செல்வன் பேசுகையில், அயோத்திதாசா் படைப்புகளை புத்தாக்கம் செய்து அச்சிட அரசு முன்வர வேண்டும் என்றாா்.
அதற்கு பதிலளித்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: அயோத்திதாசரை போற்றும் பணிகளை திமுக அரசு சிறப்புற செய்து வருகிறது. மணிமண்டபம் எழுப்பியும், சிலை அமைத்தும் அவரது புகழைப் பரப்பியவா் தமிழக முதல்வா். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அயோத்திதாசரை தமிழக அரசு தொடா்ந்து பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், அவரது படைப்புகளை புத்தாக்கம் செய்து அச்சேற்றி வெளியிடுவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.