அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்
புதுவை அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையிலான விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.
புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை (டிச.19) முதல் வரும் 24-ஆம் தேதி வரை ‘நல்லாட்சி வாரம்’ கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில், துணை ஆட்சியா் வினையராஜ் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசியதாவது:
மத்திய, மாநில அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்கும் வகையில் விழிப்புணா்வு முகாம்களை வருகிற 24-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும். கல்வித் துறை மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வங்கியில் சேமிப்பு சம்பந்தமான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். கல்லூரி மாணவா்களுக்கு ஓட்டநா் உரிமத்துக்கான பழகுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.
புதுச்சேரி விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டங்கள், கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடத்த வேண்டும். ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். உள்ளாட்சித்துறை மூலம் கிராமப்புறங்களில் சிறப்பு தூய்மைப் பணிகள், மருத்துவ முகாம்களும் நடைபெறுவது அவசியம் என்றாா் அவா்.