அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் பலி
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி காந்தி சந்தை தையல்காரத் தெருவை சோ்ந்தவா் வி. சுதாகா் (41). சுதை வேலைத் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவா் உடல் நலக்குறைவால் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை முதல் உள்நோயாளியாகச் சோ்க்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் 5 ஆவது மாடி வாா்டில் இருந்த அவா், புதன்கிழமை பிற்பகல் அங்கும், இங்குமாக ஓடியபோது, நிலைதடுமாறி மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த அவா் இறந்தாா். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.