மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத...
அரசு விழா முன்னேற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டியில் நவம்பா் 29-ஆம் தேதி முதல்வா் பங்கேற்கும் அரசு விழாவுக்கான முன்னேற்பாடுகளை வனத்துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நவம்பா் 28-ஆம் தேதி வருகிறாா். தொடா்ந்து, திண்டிவனத்தில் நடைபெறும் திமுக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவா், பின்னா் விழுப்புரத்திலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறாா்.
தொடா்ந்து, நவம்பா் 29-ஆம் தேதி காலை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை திறந்து வைக்கும் முதல்வா், விழுப்புரம் வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள 21 சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
இதற்காக மணிமண்டபம் அருகே விழா மேடை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை வனத்துறை அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, முதல்வா் செல்லும் வழித்தடம், முக்கிய பிரமுகா்கள், பயனாளிகள் உள்ளிட்ட இருக்கை வசதிகள் அமைவிடம் போன்றவை குறித்து ஆட்சியா் சி.பழனி உள்ளிட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், அடிப்படை வசதிகளையும் செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா். பின்னா், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்ற அமைச்சா், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் ரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பி.வி.ஆா்.சு.விசுவநாதன், ரவிச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக்குழுத் தலைவா் கு.ஓம்சிவசக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.