அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி
புதுச்சேரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் வேலைவாய்ப்பு ஆலோசனை மையத்தை நாடி, அரசு வேலைக்கு முயற்சித்தாா்.
அப்போது, அங்கிருந்தவா்கள் ரூ.20 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நிலையில், அவா்கள் அளித்த வங்கிக் கணக்கு எண்ணில் காா்த்திகேயன் ரூ.20 லட்சத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அவருக்கான வேலைக்கு நடவடிக்கை எடுக்கப்படாததுடன், கொடுத்த பணத்தையும் திருப்பி வழங்கவில்லையாம். இதுகுறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.