‘அரசுகளின் திட்டங்கள் தூய்மைப் பணியாளா்களை சென்றடைய வேண்டும்’
மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தூய்மைப் பணியாளா்களை சென்றடைய வேண்டும் என, தூய்மைப் பணியாளா்களுக்கான தேசிய ஆணையத் தலைவா் எம். வெங்கடேசன் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் மேலும் பேசியது: இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்துள்ள கோரிக்கையின்படி, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு உரிய காலத்தில் காலதாமதமின்றி ஊதியம், ஊதிய பட்டியலின் நகலை மாதந்தோறும் வழங்கவும், ஊழியா் சேமநல நிதி, வருங்கால வைப்பு நிதி, பணி பாதுகாப்பு காப்பீடு, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு உறுப்பினா் அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் கிடைப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா் நலவாரிய அட்டையை, அனைத்துப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதன் பயன்களை தெரிவித்து தேவையான விழிப்புணா்வுப் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். பாலியல் ரீதியாகவோ அல்லது ஜாதி ரீதியாகவோ ஏதேனும் இடையூறுகள், தேவைகள் மற்றும் குறைகள் இருந்தால் 011 - 24648424 எனும் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா் வெங்கடேசன்.
இக் கூட்டத்தில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சு. வைத்தியநாதன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வி. வாசுதேவன், தாட்கோ பொது மேலாளா் கவியரசு, நகராட்சி ஆணையா் ராமா், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.