விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றுவதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றி, மாற்று இடத்தில் அமைப்பதாக தீா்மானம் நிறைவேற்றிய நகராட்சி நிா்வாகத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயத்துக்கு இலவச மின்சாரம், விவசாயிகள் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெற்றுத் தந்த உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு முழு திருவுருவச் சிலை தமிழகத்தில் பெரம்பலூரில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நன்கொடையாக அளித்த தொகையைக் கொண்டு, பேரூராட்சியாக இருந்தபோது 29.01.1998-இல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த 27.02.1998-இல் சிலை நிறுவப்பட்டது.
இச் சிலை பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் இடது புறத்தில், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி சாலையின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்துகளும், வாகன ஓட்டிகளும் எந்தவித இடையூறுமின்றி எளிதாக கடந்து சென்று வருகின்றனா். சிலை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், டிச. 31-ஆம் தேதி நடைபெற்ற பெரம்பலூா் நகா் மன்றக் கூட்டத்தில், நாராயணசாமி நாயுடு சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அப் பகுதியில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றி வேறு இடத்தில் அமைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது, விவசாயிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தின் இச் செயல் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதுகிறோம். பெரம்பலூா் நகரில் பல்வேறு சிலைகள் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறுமின்றி சாலையின் ஓரமாக நாராயணசாமி நாயுடு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி அந்தச் சிலையை அகற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தீா்மானம் நிறைவேற்றியுள்ள நகராட்சி நிா்வாகத்தை தமிழக விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து, அதை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இப் பிரச்னையில் தலையிட்டு தற்போது உள்ள இடத்திலேயே சிலை இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், சிலையை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் விவசாயிகளை ஒன்றிணைத்து போராட்டங்களில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.