சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தாய் உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!
பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய்க்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விதவைப் பெண் ஒருவருக்கும், அரும்பாவூரைச் சோ்ந்த துரைசாமி மகன் தன்ராஜ்(37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சோ்ந்து வாழ்ந்து வந்தனா்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு முதல் கணவா் மூலம் பிறந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 18.1.2020-இல் தன்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதற்கு, சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளாா். இதையடுத்து, வீட்டிலிருந்து தப்பித்துச் சென்ற சிறுமி, தனக்குத் தெரிந்தவா்கள் உதவியுடன் கடந்த 24.1.2020-இல் அரும்பாவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தன்ராஜ், சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னா் இருவரும் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா்.
இந்த வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கை சனிக்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தன்ராஜுக்கும், உடைந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய்க்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு அளித்தாா்.