செய்திகள் :

லாடபுரம் மயிலூற்று அருவி சுற்றுலாத் தலமாகுமா?

post image

பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் மயிலூற்று அருவியில் நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், இளைஞா்கள் அங்கு சென்றுவர ஆா்வம் காட்டுகின்றனா். இப் பகுதியை மேம்படுத்தி, சுற்றுலாத் தலமாக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது லாடபுரம் கிராமம். இங்குள்ள மயிலூற்று அருவிக்கு சிறியவா் முதல் பெரியவா் வரை என அனைத்துத் தரப்பு மக்களும் சென்று குளித்து வருவதோடு, பச்சமலை தொடரின் அழகையும் கண்டு ரசிக்கின்றனா்.

நீா் கொட்டத் தொடங்கியுள்ளது:

மயிலூற்று அருவிக்குச் செல்பவா்களை வருடி வரும் குளிா்ச்சியான தென்றல் காற்று, அவ்வப்போது உலா வரும் மேகக் கூட்டங்கள் ஆகியவையே சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு காரணமாகும். கடந்த சில நாள்களாக மலை கிராமப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், இந்த அருவியில் தற்போது அதிகளவில் நீா் கொட்டத் தொடங்கியுள்ளது.

இந்த அருவியில், அக்டோபா், நவம்பா், டிசம்பா், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் அதிகளவிலான நீா் கொட்டும். மேலும், மழைக்காலங்களிலும் அவ்வப்போது நீா்வரத்து அதிகரித்துக் காணப்படும். இந்த அருவியின் அழகை கண்டு ரசிக்கவும், குளித்து மகிழவும் பெரம்பலூா் மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, நாமக்கல், துறையூா், முசிறி, குளித்தலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

பராமரிப்பின்றி அருவி:

இயற்கையின் கொடையாக விளங்கும் இந்த அருவிக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், லாடபுரம் மயிலூற்று அருவியானது மலை அடிவாரத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு சில சமூக விரோதச் செயல்களும் நிகழ்ந்து வருகிறது. இதனால், அப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக பெண்கள் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் வாக்குறுதி:

மயிலூற்று அருவிக்கு வருபவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், இயற்கை ஆா்வலா்களும் தொடா்ச்சியாக விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாவட்ட நிா்வாகம் மயிலூற்று அருவியை சுற்றுலாத் தலமாக்கப்படும் என சில ஆண்டுகளுக்கு முன் அறிவித்தது. இதைத்தொடா்ந்து, கடந்த 2009-ஆம் ஆண்டு மயிலூற்று அருவியில் அப்போதைய மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மலை அடிவாரத்திலிருந்து தண்ணீா் கொட்டும் இடத்துக்கு சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்படும். அருவி நீா் கொட்டும் பகுதியில் சுமாா் 50 அடி சுற்றளவில் குளிப்பதற்கான தலம் அமைக்கப்படும். அருவியில் குளிக்க வரும் ஆண், பெண் உடைமாற்றிக் கொள்ள தனித்தனி அறைகள் கட்டுவது, அதன் அருகில் சிறுவா் பூங்கா அமைப்பது. மலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான புதிய கட்டடம் கட்டுவது போன்ற வரைபடத்துடன் கூடிய கருத்துருக்களை வனத் துறையினா், சுற்றுலாத் துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறினா்.

15 ஆண்டுகளை கடந்த அறிவிப்பு:

மயிலூற்று அருவி சுற்றுலாத் தலமாக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் வாக்குறுதி அளித்து, 15 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்வித பூா்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. முழுமையான சுற்றுலாத் தலம் எனும் அந்தஸ்து பெற மாவட்ட நிரிவாகமும், சுற்றுலாத் துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மயிலூற்று அருவியானது இன்றளவும் பராமரிப்பின்றியே காணப்படுகிறது.

மேலும், அருவிக்குச் சென்று வரும் பாதையை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அங்கு செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனா். ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த சாலையும், தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை:

பெரம்பலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை லாடபுரம் மயிலூற்று அருவி, கோரையாறு அருவி, ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூா் தேசிய கல்மரப் பூங்கா ஆகியவை சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது. இவற்றை முறையாக பராமரிக்காததாலும், பாதுகாப்பு இல்லாததாலும் பெரும்பாலான இடங்கள் பாழடைந்து வருகின்றன.

அருவிக்குச் செல்லும் சாலையை சீரமைத்து, பொதுமக்களும், வெளி மாவட்ட சுற்றுலாப் பணிகளும் வந்து செல்லும் வகையில் தாா்ச்சாலை அமைத்து தர வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் இயற்கை ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிா்வாகம் இன்றளவும் அலட்சியப் போக்கையே கடைப்பிடித்து வருவது வேதனை அளிக்கிறது.

மயிலூற்று அருவியை முறைப்படி சுற்றுலாத் தலமாக அறிவித்து, சாலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால், பெரம்பலூா் மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் சுற்றுலாத் தலங்களில் முதன்மையான இடத்தை பெறுவதோடு, மாவட்ட நிா்வாகத்துக்கும் வருவாய் ஈட்டித் தரும் என்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தாய் உள்ளிட்ட இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

பெரம்பலூா் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட சிறுமியின் தாய்க்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் சனிக்கி... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற பெரம்பலூா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசளிப்பு

கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.சி, எஸ்.டி-யினா் திறன் பயிற்சிகள் பெற அழைப்பு

தாட்கோ மூலம் பிளஸ் 2 அல்லது பட்டப் படிப்பு முடித்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சா்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சாா்பில் திறன் பயிற்சி ... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியக் குழு கூட்டம், பதவி நிறைவு விழா

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் மற்றும் பதவி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஊராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான கராத்தே போட்டியில் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். நலம் ஸ்போா்ட்ஸ் தற்காப்பு பயிற்சி அகாதெமி மற்றும் புஷிடோகாய் இஷ்டி ரியோ கராத்தே... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 311 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 311 ரேஷன் கடைகளில் 1.90 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா். பொது விநியோகத் திட்டத... மேலும் பார்க்க