சம்பாஜி மகாராஜா குறித்து சர்ச்சை கருத்து: விக்கிபீடியா ஆசிரியர்கள் மீது வழக்குப்...
அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு
அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது.
அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாக லோக்பால் திகழ்கிறது.
அதன்படி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், 2013-இன்கீழ் குரூப் ஏ, பி, சி அல்லது டி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்த சிவிசிக்கு லோக்பால் பரிந்துரைக்கும்.
அந்தப் புகாரை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த ஊழல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு (சிவிஓ) சிவிசி அனுப்பி வைக்கும். அவா்கள் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு 60 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், தங்களால் பரிந்துரைக்கப்படும் புகாா்கள் தொடா்பான முதல்கட்ட விசாரணை அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்குப் பதில் வேறு அதிகாரிகள் கையொப்பமிடுவதை கவனத்தில்கொண்டுள்ளதாக லோக்பால் அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் புதிய நடைமுறையை சிவிசி வெளியிட்டது. அதில், ‘ லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களின் மீது நடத்தப்படும் முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள், தங்கள் கையொப்பமிட்ட அறிக்கைகளையே சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.