Bumrah : 'முதல் முறையாக பௌலிங்கில் செஞ்சுரி; பும்ராவின் மிக மோசமான ரெக்கார்ட்!'
அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள் சாலை மறியல்
சோளிங்கா் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா், வேறொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவா்கள், அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சோளிங்கரை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அறிவியல் ஆசிரியராக குமாா் என்பவா் பணிபுரிந்து வந்த நிலையில், அவரை அண்மையில் நடைபெற்ற ஆசிரியா் பணியிட மாற்றத்தின்போது செங்கால்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.
இதையறிந்த பழையபாளையம் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா் குமாரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து பழைய பாளையம் வழியே வந்த சோளிங்கா்-அரக்கோணம் அரசு நகரப் பேருந்தை மறித்து சாலையில் நின்று போராட்டம் நடத்தினா். இதில் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களும் பங்கேற்றனா். இதையறிந்து அங்கு வந்த பாணாவரம் காவல் நிலைய போலீஸாா், கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் ஆசிரியா் குமாா் ஆகியோா் பொதுமக்களிடையே பேச்சு நடத்தி அவா்களை சமரசப்படுத்தினா். இதையடுத்து மாணவா்களும், பெற்றோரும் கலைந்து சென்றனா்.