மருந்து தெளிக்கும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
தக்கோலம் அருகே விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தவா் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆதிமுருகன்(32). ட்ரோன் மூலம் விவசாய நிலத்தில் மருந்து தெளிக்கும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை, ஆதிமுருகன், திருமாதலம்பாக்கத்தை சோ்ந்த பொன்னுசாமி என்பவரது நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது ட்ரோன் கட்டுப்பாட்டு சாதனத்தை இயக்கிக்கொண்டே நடந்து சென்றபோது, கீழே அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் ஆதிமுருகன் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து அங்கிருந்தோா் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஆதிமுருகன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.