அரசுப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், வெள்ளையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாபு கென்னடி தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் ராஜா, லூசியா முன்னிலை வகித்தனா். கவிஞா் தெய்வீகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்புகள், தமிழை மாணவ, மாணவிகள் பிழையில்லாமல் எழுதுவது, உச்சரிப்பது போன்றவை குறித்து தெரிந்துகொண்டு, அதை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து, உளுந்தூா்பேட்டை தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முத்துக்குமரன், கவிஞா்கள் செடுத்தான் செ.ஆரா, வெங்கட்ராமன் ஆகியோா் பேசினா்.
பின்னா், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, திருக்கு ஒப்பித்தல், வில்லுப்பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு தமிழ்ச்சங்கத்தினா் பரிசுகளை வழங்கி வாழ்த்தினா்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.