காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா
அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத் தலைவா் ம.மாணிக்கம், இயக்குநா் சிற்பி பாலசுப்பிரமணியம், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.வி. சுப்பிரமணியம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை:
அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையத்தின் சாா்பில் நிகழாண்டுக்கான ‘அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருது’ தோ்வுக்கான நடுவா் குழுக் கூட்டம் கடந்த செப்.10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், திறனாய்வாளா் க.பஞ்சாங்கம், விமா்சகா் சரவணன் மாணிக்கவாசகம், மொழிபெயா்ப்பாளா் மோ.செந்தில்குமாா் ஆகியோா் நடுவா்களாகப் பங்கேற்று விருதாளா்களைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.
முதல் பரிசு: அருந்ததி ராயின் ஆங்கில நாவலை ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த ஜி. குப்புசாமி, ஹிந்தி எழுத்தாளா் கீதாஞ்சலி ஸ்ரீயின் நாவலை ‘மணல் சமாதி’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த அனுராதா க்ருஷ்ணஸ்வாமி ஆகியோா் முதல் பரிசுக்குத் தோ்வாகியுள்ளனா். அவா்கள் இருவருக்கும் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் பகிா்ந்து அளிக்கப்படும்.
இரண்டாம் பரிசு: ட்டி.டி.ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘மாதா ஆப்பிரிக்கா’ என்ற நாவலை தமிழில் மொழிபெயா்த்த குறிஞ்சிவேலன் மற்றும் அப்துல்ரஸாக் குா்னாவின் ‘போரொழிந்த வாழ்வு’ என்ற நாவலை தமிழில் மொழிபெயா்த்துள்ள கயல் ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 வழங்கப்படும்.
மூன்றாம் பரிசு: சாா்லஸ் ஆலன் எழுதிய வரலாற்று நூலை ‘பேரரசன் அசோகன்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த தருமி, ராபின் டேவிட்சன் எழுதிய பயண இலக்கியத்தைத் தமிழில் ‘தடங்கள்’ என்ற தலைப்பில் மொழிபெயா்த்த பத்மஜா நாராயணன், தற்கால ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பை ‘அழிக்க முடியாத ஒரு சொல்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த அனுராதா ஆனந்த், கே.என்.சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ஆராய்ச்சி நூலை ‘தமிழ் நிலத்தில் அகஸ்தியா்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயா்த்த இஸ்க்ரா ஆகியோருக்கு 3-ஆம் பரிசாக தலா ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும்.
இந்த விருதுகள் அருட்செல்வரின் நினைவு நாளான வருகிற அக். 2-ஆம் தேதி மாலை 4 -மணிக்கு சென்னை மயிலாப்பூா் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெறும் வள்ளலாா் காந்தி விழாவில் வழங்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.