புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அனைவருக்கும் பணப் பலன்களை வழங்குவதற்கான காலவரையறையை நிா்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியா்கள் மாநிலம் முழுவதும் கடந்த 18-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தந்த மாவட்டத்தின் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்றுவரும் இந்தத் தொடா் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமையுடன் 31 நாள்களை கடந்துள்ளது.
இதுகுறித்து சென்னை பல்லவன் இல்லம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் குருசாமி கூறியதாவது:
தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஓய்வூதியா்கள் மற்றும் ஊழியா்களை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் நடைபெற்ற அமைச்சருடனான பேச்சுவாா்த்தையிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாய்மொழியான உறுதி மட்டுமே வழங்கப்படுகிறது. அதிகாரப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வுகாணும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.