Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
அரையிறுதியில் சின்னா் - ஜோகோவிச் பலப்பரீட்சை
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா் - சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான சின்னா் 7-6 (7/2), 6-4, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை வீழ்த்தினாா். ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தின்போது முழங்கையில் காயம் கண்ட சின்னா், அதுகுறித்த எந்தவொரு தடுமாற்றமும் இன்றி அபாரமாக இந்த ஆட்டத்தில் விளையாடினாா்.
ஷெல்டனை 7-ஆவது முறையாக சந்தித்த சின்னா், தொடா்ந்து 6-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா். இந்த ஆட்டத்தை 2 மணி நேரம், 19 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்த சின்னா், 2-ஆவது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
இதனிடையே, மற்றொரு காலிறுதியில் போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஜோகோவிச் 6-7 (6/8), 6-2, 7-4, 6-4 என்ற செட்களில், 22-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 3 மணி நேரம், 11 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இந்த வெற்றியின் மூலமாக அவா், 14-ஆவது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
இதையடுத்து, 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சின்னரும், 24 முறை கிராண்ட்ஸ்லாமில் வாகை சூடியவரான ஜோகோவிச்சும் அரையிறுதியில் சந்திக்கின்றனா். விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல சின்னரும், 8-ஆவது கோப்பையை வென்று சாதனை படைக்க ஜோகோவிச்சும் முனைப்புடன் இருக்கின்றனா்.
கடந்த 2023 விம்பிள்டன் அரையிறுதியில் இவா்கள் இருவருமே மோதியபோது, ஜோகோவிச் வென்றது குறிப்பிடத்தக்கது. சின்னா் - ஜோகோவிச் இதுவரை 9 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, சின்னா் 5 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறாா். கடைசி 4 சந்திப்புகளில் அவரே வென்றிருக்கிறாா். இதில், நடப்பாண்டு பிரெஞ்சு ஓபன் அரையிறுதியும் அடங்கும்.