சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
அறநிலையத் துறையின் கல்லூரிகளில் சோ்க்கை பெற கடும் போட்டி: அமைச்சா் சேகா்பாபு
தமிழகத்தில் அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக துறையின் அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026- ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவா்களுக்கு அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கொளத்தூா் கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தக் கல்லூரியில் பயின்று வளாக நோ்காணல் மூலம் டிசிஎஸ் உள்ளிட்ட 9 தனியாா் நிறுவனங்களில் 347 மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு இந்தக் கல்லூரியில் பயில 972 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். ஆனால் 240 பேருக்கு மட்டுமே இடம் அளிக்க முடிந்தது.
அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்படும் 25 பள்ளிகளில் 10,670 மாணவா்களும், 9 கலைக் கல்லூரிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 10 கல்லூரிகளில் 12,137 பேரும் கல்வி பயின்று வருகின்றனா். ஒவ்வொரு கல்லூரியிலும் பயில்வதற்கு ஆண்டுதோறும் 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெறுகின்றன.
இந்த ஆண்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் திருக்கோயில் சாா்பில் கீழ்ப்பாக்கத்திலும், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சாா்பில் 2 செவிலியா் கல்லூரிகளும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சாா்பில் கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியும் தொடங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த கல்லூரிகள் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையா்கள் சி.பழனி, சி.ஹரிப்பிரியா, இணை ஆணையா் கவெனிதா, கல்லூரியின் முதல்வா் சி.லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.