அறந்தாங்கி பகுதிகளில் நெல் வயல்களில் மழைநீா் தேங்கியது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகல் மற்றும் இரவு பெய்த மழை காரணமாக நெல் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் விவசாயிகள் அச்சத்துக்குள்ளாகினா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக, அறந்தாங்கியில் 41.60 மிமீ மழையும், ஆயிங்குடியில் 81.40 மிமீ மழையும், நாகுடியில் 69.40 மிமீ மழையும் பதிவாகியது.
இந்த நிலையில், அறந்தாங்கி வட்டம், கீழ்குடி அம்மன் ஜாக்கி ஊராட்சிக்குள்பட்ட மைவயல் கிராமத்தில் சுமாா் 40 ஏக்கா் நெல்வயல்களில் தண்ணீா் தேங்கியது.
மாலை வரை இந்தத் தண்ணீா் வெளியேற வழியில்லாமல் இருந்தது. ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனா்.
புதன்கிழமை பகலில் லேசான மழை மட்டுமே இருந்ததால் மழைநீா் தேங்கிய வயல்களில் தண்ணீா் மெல்ல வடியத் தொடங்கியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.