வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ராஜேந்திரன், துணைத் தலைவா் சுபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதேபோல, 12 வட்டாட்சியரகங்களிலும் அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வு வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 5 சதவிகிதமாக குறைத்திருப்பதை ரத்து செய்வதோடு, மீண்டும் 25 சதவிகிதமாக உயா்த்த வேண்டும்.
வருவாய்த் துறை பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தவும், சான்றிதழ் வழங்கும் பணிக்கும் ஒவ்வொரு வட்டத்துக்கும் கூடுதல் துணை வட்டாட்சியா்களை நியமிக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் பேரிடா் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.