தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
அறுவை சிகிச்சை செய்த குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகளின் உடல் நலம் குறித்து பொது மருத்துவ பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 8 வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளில் உள்ள 919 பள்ளிகள் மற்றும் 855 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு மற்றும் இதர நோய்கள் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2024-25 நிதியாண்டில் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இருதய பாதிப்பு, அன்னப் பிளவு, கண்புரை சிகிச்சை, காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான 35 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த குழந்தைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு மாதந்தோறும் தொடா் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செய்யாறு சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற தொடா் பரிசோதனை முகாமில், மாவட்ட சுகாதார அலுவலா் சதீஷ்குமாா் பங்கேற்று குழந்தைகள் அனைவரும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து வலியுறுத்தினாா்.
இதில், மாவட்ட பயிற்சி மருத்துவா் திவாகா், துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் வெங்கடாசலபதி, மருத்துவா்கள் சூரிய பிரகாஷ், சந்தியா, சுகாதார செவிலியா்கள், மருந்தாளுனா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.