Ration goods: கவனம் பெரும் `இல்லம் தேடி ரேஷன்' - முதல்கட்ட சோதனையில் 10 மாவட்டங்...
அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் நடப்பு சாம்பியனான அல்கராஸ் 6-1, 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பிரிட்டன் தகுதிச்சுற்று வீரா் ஆலிவா் டாா்வெட்டை வென்றாா். 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 3-6, 6-3, 7-6 (7/0), 4-6, 6-3 என்ற செட்களில் கனடாவின் கேப்ரியல் டியாலோவை தோற்கடித்தாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் ஜோகோவிச் 6-3, 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, பிரிட்டனின் டேன் இவான்ஸை வெளியேற்ற, 11-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 4-6, 6-2, 6-4, 6-0 என்ற வகையில் பிரான்ஸின் ஆா்தா் கஸாக்ஸை வீழ்த்தினாா்.
இதர ஆட்டங்களில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக், ஸ்பெயினின் ஜேமி முனாா், சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச் ஆகியோரும் 3-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
பாலினி தோல்வி: மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-4, 4-6, 4-6 என்ற செட்களில், ரஷியாவின் கமிலா ரகிமோவாவால் வீழ்த்தப்பட்டாா். பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு 6-3, 6-3 என்ற நோ் செட்களில், 2023 விம்பிள்டன் சாம்பியனான செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவாவை சாய்த்தாா்.
உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில், செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வெளியேற்றினாா். 7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-1, 7-6 (7/4) என இத்தாலியின் லூசியா புரான்ஸெட்டியை தோற்கடித்தாா்.
10-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோ 6-1, 6-2 என எளிதாக, ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வெல்ல, 11-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 6-3, 6-1 என்ற வகையில் கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.
போபண்ணா தோல்வி: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/பெல்ஜியத்தின் சாண்டா் கிலே கூட்டணி முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டது.
இந்தியாவின் ரித்விக் போளிபள்ளி/கொலம்பியாவின் நிகோலஸ் பாரியென்டோஸ் இணை, இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே ஜோடி, இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி/மெக்ஸிகோவின் மிகேல் வரேலா கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.