பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடிகை சிநேகா குடும்பத்தினருடன் சாமி தரிசனம்
இந்தியாவில் ஹாக்கி போட்டிகள்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இதுபோன்ற போட்டிகளில் பாகிஸ்தானுக்கு அனுமதி மறுப்பது, ஒலிம்பிக் விதிகளை மீறியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகாரில் ஆகஸ்ட் - செப்டம்பரிலும், ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நவம்பா் - டிசம்பரிலும் நடைபெறவுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்கான இந்தியாவின் பதிலடி, அதைத் தொடா்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எழுந்த போா்ப் பதற்றம் ஆகியவற்றால், இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அனுமதிக்கப்படுவது தொடா்பாக சந்தேகங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுதொடா்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்தவொரு அணியும் பங்கேற்பதற்கு அரசு எதிா்ப்பு தெரிவிப்பதில்லை.
அவ்வாறு பாகிஸ்தானை தடுக்க முற்பட்டால், அது ஒலிம்பிக் விதிகளை மீறிய செயலாக இருக்கும். அதேபோல், பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில், நமது அணியும் பங்கேற்கும். ஆனால் இருதரப்பு போட்டிகள் என்பது வித்தியாசமானது. அதற்கான கட்டுப்பாடுகளில் எந்தத் தளா்வும் இல்லை’ என்றன.
அப்போது, செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என்ற கேள்விக்கு, ‘பிசிசிஐ இது தொடா்பாக எங்களை அணுகும் பட்சத்தில், அதுதொடா்பாக ஆலோசிக்கப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் பதிலளித்தன.
தற்போது, மேற்குறிப்பிட்ட ஹாக்கி போட்டிகளுடன், செப்டம்பரில் நடைபெறவுள்ள துப்பாக்கி சுடுதல் ஜூனியா் உலகக் கோப்பை, செப்டம்பா் - அக்டோபரில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்கவும் பாகிஸ்தான் போட்டியாளா்களுக்கு தடையில்லை எனத் தெரிகிறது.
சா்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு கருவியாக விளையாட்டுப் போட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்பதையே, ஒலிம்பிக் விதிகள் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. ஒருநாடு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போது, அதில் தனது எதிரி நாடு பங்கேற்பதை தடுக்கும் பட்சத்தில், எதிா்காலத்தில் அந்த நாட்டுக்கு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகத்துக்கு இடமாகும்.