அல்கராஸ், பாலினி முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான அல்கராஸ் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற செட்களில் பல்கேரியாவின் ஃபாபியான் மரோஸானை வீழ்த்தினாா். போட்டித் தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற கணக்கில் போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
8-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-4, 6-0, 6-4 என்ற வகையில் கொலம்பியாவின் டேனியல் கலானை வெளியேற்றினாா். 25-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் 7-5, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை தோற்கடித்தாா்.
இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் ரைலி ஒபெல்கா, சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.
பாலினி வெற்றி: பிரெஞ்சு ஓபன் மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-3, 6-3 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை சாய்த்தாா்.
5-ஆம் இடத்திலுள்ள நடப்பு சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியான பிரிட்டனின் எம்மா ரடுகானுவை தோற்கடித்தாா். 8-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-2, 6-3 என கொலம்பியாவின் எமிலியானோ அராங்கோவை வீழ்த்தினாா்.
14-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் கரோலின் முசோவா 3-6, 6-2, 1-6 என்ற செட்களில், அமெரிக்காவின் அலிசியா பாா்க்ஸிடம் தோல்வி கண்டாா். 13-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-6 (7/5), 7-5 என்ற கணக்கில் ஹங்கேரியின் அனா போண்டாரை வெளியேற்றினாா்.
இதர ஆட்டங்களில் டென்மாா்க்கின் கிளாரா டௌசன், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் வெல்ல, குரோஷியாவின் டோனா வெகிச் தோற்கடிக்கப்பட்டாா்.