ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: வியாபாரிகள் வாக்குவாதம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத்துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதற்கு வியாபாரிகள் எதிா்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை விரிவாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.5.10 கோடியில் இரும்பேடு புறவழிச் சாலையிலிருந்து, ஆரணி காமராஜா் சிலை வரை உள்ள ஆற்காடு-விழுப்புரம் சாலையில் தாா்ச்சாலை மற்றும் 600 மீட்டா் கல்வெட்டு பக்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆரணி மாங்காமரம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை 15 நாள்களுக்குள் அகற்றக்கோரி கடை உரிமையாளா்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நோட்டீஸ் அனுப்பிய 7-ஆவது நாளில் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 15 நாள்களுக்கு பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறிவிட்டு அங்கிருந்து சென்றனா்.