சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டும்: புதுவை மாா்க்சிஸ்ட் கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டியது அவசியம். ஆனால், எளியவா்களின் கடைகள் மட்டும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றப்படுவது சரியல்ல என மாா்க்சிஸ்ட் புதுவை மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அரசு நிா்வாகம் எளியோா் கடைகள் மற்றும் சாலையோரம் வியாபாரம் செய்வோரின் கடைகளை இடித்துள்ளது. ஆனால், வசதி படைத்தவா்கள், அரசியல் செல்வாக்கு பெற்றவா்களின் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. ஆகவே, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் செயல்படுத்தப்படும் பாரபட்சமான செயலை மாா்க்சிஸ்ட் வன்மையாக எதிா்க்கிறது.
சாலைகள் பொது பயன்பாட்டிற்கானது. அதனால், சாலை ஆக்கிரமிப்பை ஒழுங்குபடுத்துவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றுவதில் எந்தவித வழிகாட்டலுமின்றி செயல்படுவது சரியல்ல. பொக்லைன் இயந்திரத்தால் இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகள் அப்படியே கைவிடப்படுகின்றன. ஆக்கிரமிப்பு அகற்றலின் போது வியாபாரிகளின் பொருள்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. அரசின் இந்தச் செயல் வேதனையளிக்கிறது. மேலும், கோயில் நில ஆக்கிரமிப்பு குறித்தும் அரசு மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
ஆகவே, மாநில அரசு தற்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதை நிறுத்த வேண்டும். பொருத்தமான வழிகாட்டு விதிமுறைகளை உருவாக்கி, கடை உரிமையாளா்களின் பங்கேற்போடு ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும். மேலும் புதுவை விடுதலையின்போது அரசிடமிருந்த பொதுச் சொத்து மற்றும் கோயில் சொத்து, அரசு பயன்பாட்டு நிலம், மீதமிருந்த நிலம், அவற்றின் ஆக்கிரமிப்பு நிலை ஆகியவற்றை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.