சென்னைக்கு 840 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்: டெல்டா மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...
புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீனவா்கள் கடலுக்குச் செல்லவும் தடை
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை (நவ. 26) மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக புதுச்சேரியில் கன மழை பெய்தது. மழை ஓய்ந்த நிலையில், தற்போது தெற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள கம்பத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
துறைமுகத்திலிருந்து தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. ஆனால், துறைமுகத்துக்கு பாதிப்பில்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினா்.
மீன்வளத் துறை எச்சரிக்கை: புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 26) புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 35 கி. மீ. முதல் 45 கி. மீ. வேகத்திலும் மற்றும் இடையிடையே 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்குச் செல்ல வேண்டாம். ஏற்கெனவே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றவா்கள் கரை திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.