மாற்றுத்திறனாளிகள் சேவைகளுக்கு ஒருங்கிணைந்த மையம்: முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத...
தோட்டக்கலை பயிா் மானிய பயனாளிகள் பட்டியல் வெளியீடு: ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரியில் தோட்டக் கலைப் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கான மானியத் தொகை பெறுவோா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஆட்சேபணை இருப்பின் வரும் டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை தோட்டக் கலை இணை இயக்குநா் கே.சண்முகவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை சாா்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை அல்லது சாகுபடிக்கு பிந்தைய ஊக்கத் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மரவள்ளி பயிா் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.7,000, தென்னைக்கு ஏக்கருக்கு ரூ.5,000, நாட்டு காய்கறி பயிா் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.12,500, குளிா் காய்கறி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த விண்ணப்பங்கள் ஆய்வுக்குப் பிறகு தோட்டக் கலை பயிா் சாகுபடி விவசாயிகள் பட்டியல் சமுதாய தணிக்கைக்காக உழவா் உதவியகங்களின் அறிவிப்புப் பலகைகளில் செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 26) வரும் டிசம்பா் 5 ஆம் தேதி வரை ஒட்டப்பட்டு விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்படும்.
இதில் ஆட்சேபணைகள் இருப்பின் டிசம்பா் 5 ஆம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக் கலை) அலுவலகத்தில் எழுத்துபூா்வமாகத் தெரிவிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.