பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு பாஜகதான் பொறுப்பு: ஆம் ஆத்மி
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2025 (மிதுனம்)
ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
நடத்தையும் தெளிவும் சிந்தனையில் நிதானமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!
இந்த ஆண்டில் ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென்று அனுகூலமான விடுதலை கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அனாதைகளுக்கும் நலிந்தோருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவளிப்பீர்கள். சமுதாயத்தில் உயர்தோருடன் அறிமுகமாவீர்கள். உங்களின் காரியங்கள் இடையூறின்றி நிறைவேறும். எதிர்பார்த்த எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசமும் செய்வார்கள். பெற்றோர் வழியிலிருந்து நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப்பிரிவுகளும் உண்டாகும். குடும்பப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவீர்கள். உங்கள் நன்னடத்தையால் அனைவரையும் கவருவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உதவி என்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நண்பர்களுக்குள் இருக்கும் சண்டைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பீர்கள். மற்றபடி உழைப்பிற்கு ஏற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும்.
உங்கள் உலக அறிவு அனுபவம் பலருக்கும் பயன்படும். தீயோர்களை மன்னிப்பீர்கள். மேலும் அவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள். பணவரவு சிறிது குறைவாக இருந்தாலும் குடும்பத் தேவைகளுக்காக செலவு செய்ய தயங்கமாட்டீர்கள். மேலும் கடன் தொல்லைகள் ஏற்படாது. உடன்பிறந்தோர் உங்களால் பயன் அடைவார்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். துணிந்து செய்யும் காரியங்கள் அனைத்தும் லாபகரமாகவே முடிவடையும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிப்பர். மேலதிகாரிகளின் மனமறிந்து செயலாற்றுவர். வருமானத்திற்கு எந்த குறையும் வராது. பயணங்களால் நன்மை கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள்.
வியாபாரிகள் புதிய யுக்திகள் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முனைவர். போட்டி பொறாமைகள் சற்று தலை தூக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். அரசாங்கத்திலிருந்தும் சலுகைகள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக கலைஞர்களே உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர்.மேலும் பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம், தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இருக்கும். குழந்தைகளால் சந்தோஷங்கள் நிறையும்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
மிருகசீரிஷம்
இந்த ஆண்டு நீண்ட முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம்.
திருவாதிரை
இந்த ஆண்டு முற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது. வேலையில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும்.
புனர்பூசம்
இந்த ஆண்டு உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.
பரிகாரம்
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும். கிழக்கு வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டம் தரும். சந்திரன் - புதன் - குரு ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.