வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
மும்மாநில எல்லையில் அத்துமீறும் கேரள வேட்டை கும்பல்; கூட்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தும் ஆர்வலர்கள்!
நாட்டின் முதல் பல்லுயிர் பெருக்க வள மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை யுனெஸ்கோ அங்கீகரித்தது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் வனத்தை உள்ளடக்கியிருக்கிறது. வன வளம் நிறைந்த பகுதிகளில் வனவிலங்கு வேட்டை பெரும் பிரச்னையாகவே தொடர்கிறது. அதிலும் குறிப்பாக கேரள வேட்டைக் கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாக இருக்கிறது.
நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் நுழையும் வேட்டை கும்பல், காட்டுமாடு, கடமான் போன்றவற்றை வேட்டையாடி இறைச்சியைக் கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் வனத்துறை கெடுபிடி அதிகம் இருக்கும் சமயங்களில் தமிழ்நாடு அல்லது கர்நாடக வனங்களுக்குள் ஊடுருவி கைவரிசை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினர் ரோந்து மேற்கொண்ட போது முதுமலையை ஒட்டிய கேரள வனமான பொன்குழியில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த கும்பலிடம் 3 நாட்டு துப்பாக்கி, மான் இறைச்சி இருப்பதைக் கண்டறிந்து கேரள மாநிலம், வயநாட்டைச் சேர்ந்த 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ``அடர்ந்த வனமாக இருந்தாலும் பல பகுதிகளிலும் சாலைகள் அதிகமாக இருக்கின்றன. சுற்றுலா பயணிகள் போர்வையில் வாகனத்தில் வந்து வேட்டையில் ஈடுபடுகின்றனர். எல்லையோர பகுதிகளில் சட்டவிரோத துப்பாக்கி புழக்கம் அதிகமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் வனவிலங்குகளையும் மரக்கடத்தலையும் தடுக்க வேண்டுமானால் மூன்று மாநில வனத்துறை மற்றும் காவல்துறையைக் கொண்டு சிறப்பு குழு அமைத்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டால் மட்டுமே தடுக்க முடியும். மூன்று மாநில அரசுகளும் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் " என வலியுறுத்தி வருகின்றனர்.