வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
அரசு பள்ளி விவகாரம்; 'தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை'- அன்பில் மகேஸ் சொல்வதென்ன?
தமிழக அரசின் கீழ் இயங்கும் 500 பள்ளிகளை தனியாருக்கு அரசு ஒப்படைக்கப் போவதாக செய்திகள் சமீபத்தில் பரவின.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், இது தொடர்பாக பேசியிருக்கிறார். ``அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கவில்லை. பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது. செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டதைப் பதிவு செய்வதா? உறுதிப்படுத்தாமல் கண்டனம் தெரிவித்தோருக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து தவறான செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்தே சோர்வாகிவிட்டேன். இன்று இந்த ஊடகத்துறையின் மூலம் மக்களுக்கும், என்ன விஷயம் என்று தெரியாமல் கண்டனம் தெரிவித்த தலைவர்களுக்கும் நான் சொல்வது என்னவென்றால்... நீங்கள் நினைக்கின்ற மாதிரி அரசு பள்ளியை தத்துக்கொடுக்கவில்லை. அதை தாரைவார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
பள்ளிக் கல்வித்துறை என்பது எங்கள் பிள்ளை. நாங்கள்தான் வளர்த்து எடுப்போமே தவிர அதை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதனை வருத்தத்துடனும், கண்டனத்துடனும் பதிவு செய்துகொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒன்றிய அரசின் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்ட நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் பார்க்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுங்கள், எங்கள் பிள்ளைகளை நாங்களே வளர்த்துக்கொள்கிறோம். நிதிச்சுமையை தமிழ்நாடு அரசே ஏற்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.