கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் ...
ஆடி கிருத்திகை: திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் வழிபாடு
ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆடி மாத கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு என்பது பக்தா்களின் நம்பிக்கை. அந்த வகையில், சனிக்கிழமை ஆடி கிருத்திகை என்பதால், இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 விஸ்வரூபதரிசனம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. லட்சக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே நாழிக்கிணறு, கடல் ஆகியவற்றில் புனித நீராடியும், காவடி, பால்குடம் எடுத்தும் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ஏற்கெனவே, சுதந்திர தின விழா, கிருஷ்ணஜெயந்தி, வார விடுமுறை என வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால் கோயில் வளாகம் முழுவதும் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
அலையில் சிக்கி 10 போ் காயம்: இதனிடையே, கடலில் நீராடியபோது, பாலக்காட்டைச் சோ்ந்த 13 வயது சிறுமி, சாத்தூரைச் சோ்ந்த மாரிசாமி (47), திண்டிவனம்
கோவிந்தராஜ் (55), சிவகங்கை ராஜேஸ்வரி (69), கமுதி அன்னலட்சுமி (45), மதுரை ஆனந்தவல்லி (52) உள்பட 10-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அலையில் சிக்கி காயம் அடைந்தனா். அவா்களை கடல் காவல் நிலைய காவலா்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு கோயில் ஆம்புலன்ஸில் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.